Abstract:
இன்று ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதனை மதிப்பீடு செய்வதற்கும், பயன்படுத்துவதற்குமான அடிப்படைத் திறன்களைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். இத்திறன்களை மாணவர்களிடையே வளர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பாடசாலைகளில் கற்றல் வள நிலையங்களின் (SLLRC) செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தமக்குவேண்டிய தகவல்களை தாங்களே சிறுவயது முதல்
பெற்றுக்கொள்வதற்கான அனுபவத்தினைப் பாடசாலை கற்றல் வளநிலையங்கள் வழங்குகின்றன என எதிர்பார்க்கப்படுகின்றன. எனவே மாணவர்களின் தகவல் தேவையை பூர்த்தி செய்வதில் பாடசாலைக் கற்றல் வளநிலையங்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பதுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் ஆய்வு செய்கின்றது. இவ்வாய்வானது அளவுரீதியான, பண்புரீதியான தரவுகளை கொண்ட ஒரு கள ஆய்வாக காணப்படுகின்றது. இவ்வாய்விற்காக சண்டிலிப்பாய் கல்விக்கோட்டத்தில் உள்ள ஐந்து 1ஏபி பாடசாலைகளில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்கின்ற 200 மாணவர்கள் எழுமாற்று முறையில் தெரிவு செய்யப்பட்டதுடன், அப்பாடசாலைகளில் கடமையாற்றும் கற்றல் வளநிலைய பொறுப்பாசிரியர்கள் அனைவரும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்கு மாணவர்களிடமிருந்து வினாக்கொத்து, குவிவுமையக் குழுக் கலந்துரையாடல், உற்றுநோக்கல் கருவிகள் மூலமும், கற்றல் வளநிலைய பொறுப்பாசிரியர்களிடமிருந்து நேர்காணல் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வில் 91 வீதமானோர் பதிலளித்திருந்தனர். மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்தும், கற்றல் வளநிலைய பொறுப்பாசிரியர்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட தரவுகள் MS
Excel மென்பொருள் மூலம் நூற்றுவீதமாக்கல், இடைக் கணிப்பு போன்ற புள்ளிவிபர நுட்ப முறைகளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அவை அட்டவணைகளாகவும், வரைபுகளாகவும் அளிக்கை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தமது தகவல் தேவையை பாடசாலை கற்றல் வளநிலையங்களினூடாக பூர்த்தி செய்ய முற்படுகின்றபோது பாடசாலைக் கற்றல் வளநிலையங்களில் தகவல் வளங்களின் கிடைப்பனவில் திருப்தியற்ற நிலமை 52% ஆகவும், இற்றைப்படுத்தப்பட்ட நூல்கள்
இன்மை 65% ஆகவும், கற்றல் வள நிலையக் கட்டடம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுதல் 31% ஆகவும், இணையத்தள வசதியின்மை 78% ஆகவும், தகவல்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கேற்ற வகையில் தகவல் சாதனங்கள் ஒழுங்குபடுத்தப்படாமை 68% ஆகவும் பிரச்சினைகள் மாணவர்களால் எதிர்கொள்ளப்படுவதாக வெளிக்கொணரப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தேவையை பூர்த்தி செய்ய முற்படுகின்ற போது ஆசிரிய நூலகர்களால் மாணவர்களுக்கேற்ற வகையில் துறைசார் தகவல் சாதனங்கள் இன்மை, நூலகவியல் சார்பான பயிற்சி மற்றும் கற்கை நெறிகளை பின்பற்றாமையால் மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் சிரமப்படுதல், கற்பித்தல் பணியுடன் கற்றல் வளநிலையச் செயற்பாடுகளை மேற்கொள்வதனால் மாணவர்களின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்வதில் காலதாமதம் ஏற்படல் போன்ற பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆசிரிய நூலகர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றன. மாணவர்களின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கலைத்துறை தவிர்ந்த ஏனைய துறைசார் தகவல்
சாதனங்களை பெற்றுக்கொள்வதற்கு பாடசாலைச் சமூகம் வெளிச்சமூகத்திலிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளல், கற்றல் வள நிலையத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்தல், ஆசிரிய நூலகர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை வழங்கல், பாடசாலை மாணவர்களின் தொகைக்கேற்ப கற்றல் வளநிலைய பொறுப்பாசிரியருக்கு கற்பித்தல் பணியிலிருந்து விடுவித்தல் போன்ற விடயங்கள் ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.